பதிவு:2023-01-03 23:25:13
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் : மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 10793 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது
திருவள்ளூர் ஜன 03 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை மற்றும் மாண்டஸ் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் நீர் இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 3231 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வரத்துக் கால்வாய்கள் மூலமாகவும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீராலும் 800 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 200 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலமாகவும், மெட்ரோ வாட்டருக்காககவும் என மொத்தம் 603 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2950 மில்லியன் கன அடி நீர் உள்ளது நீர்வரத்து 351 கன அடியாகவும் சென்னை மக்களுக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 831 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர்வரத்தாக 15 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இப்போது 2675 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மழை நீர் என 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக ஏரிகளில் உள்ள நீர் இருப்பு கூடியிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.