பதிவு:2022-04-20 11:57:51
அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
புதுச்சேரி:
மத்திய மந்திரி அமித்ஷா புதுவை வருகையின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற--னர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையின் போது காவல்துறை சார்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்மந்தமாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
அமித்ஷா வருகை புதுவை மாநில வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். முக்கியத் திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை முதல்-அமைச்சர் தெரிவிப்பார். காவல்துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு நாம் வைத்துள்ளோம்.
அதனை ஒவ்வொன்றாக செய்து கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர். அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமரும், உள்துறை மந்திரியும் புதுவை மாநில வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.