பதிவு:2023-01-07 17:12:05
திருவாலங்காட்டு வடாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு விடிய விடிய 34 வகையான அபிஷேகம் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில் திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
அதன்படி நடப்பாண்டில் ஆருத்ரா அபிஷேகம் நேற்று இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தலை விருட்சமான ஆலமரத்தின் கீழ், விபூதி, குங்குமம், கதம்ப பொடி, சந்தனம், பால், பன்னீர் மற்றும் பழங்களால் என 34 வகையான அபிஷேகம் துவங்கி விடிய விடிய அதிகாலை, 3:00 மணி வரை நடைபெற்றது.
தொடர்ந்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில், தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜபெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்த்து வழிப்பட்டு செல்கின்றனர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சிபாஸ் கல்யாண் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.