பதிவு:2023-01-07 17:18:31
திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் ஜம்பு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சீ.காந்திமதிநாதன் வரவேற்புரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் ஊர்ப்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி இளங்கோவன் பேசும் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக அரசு பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து, 2 ஆண்டுகளாக காத்திருந்தும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதால் இந்த 2023-ம் ஆண்டு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டக் களமாக தமிழகம் மாறும் என எச்சரித்தார். தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசி உரிய தீர்வு காணவேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் எச்சரித்தார்.
இதில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஞானசேகரன், எஸ்.பிரபாகரன், மாநில சட்டச்செயலாளர் ஆர்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினர். இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் நிறைவுரை வழங்கினார். இதில் சங்க நிர்வாகி ஜெ.ஜெய்கர்பிரபு உள்ளிட்டோர் நன்றி கூறினார்.