பதிவு:2023-01-07 17:22:04
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் என 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 01.01.2023-யை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
மேற்படி, இறுதி வாக்காளர் பட்டியல் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர்,சார் ஆட்சியர் அலுவலகம், பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகம், திருத்தணி, அம்பத்தூர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம்-I, VII மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி அலுவலகம், திருவள்ளூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3657 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1290 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் 2023-னை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2023-ன்படி வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த 09.11.2022 முதல் 08.12.2022 வரை வரப்பெற்ற 150018 மொத்த விண்ணப்பங்களில் 144363 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீதம் உள்ள 5655 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 3657 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 34 லட்சத்து 21 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 16 லட்சத்து 90 ஆயிரத்து 617 ஆண் வாக்காளர்களும், 17 லட்சத்து 30 ஆயிரத்து 146 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 768 பேர் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மாதவரம் சட்டமன்ற தொகுதியில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 140 குறைந்த பட்சமாக திருவள்ளூரில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 742 வாக்காளர்களும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
01.04.2023, 01.07.2023, 01.10.2023 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய காலாண்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 06.01.2023 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் அளிக்கலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும்Voter helpline App எனும் செயலி மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) பரமேஸ்வரி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சு.உதயம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.