பதிவு:2023-01-07 20:27:47
ஆவடி மாநகராட்சியில் 44 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 546 உறுப்பினர்களின் ரூ1.45 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி சான்றிதழ்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக நடைபெற்ற விழாவில் ஆவடி தொகுதிக்குட்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 3 கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 44 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 546 உறுப்பினர்களின் ரூ1.45 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.194 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கியிருக்கிறார்கள். ஆவடி மாநகராட்சி தொகுதிக்கு மட்டும் 333 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.74 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022-ல் மட்டும் 314 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.1 கோடி மதிப்பீட்டில் சுழல்; நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களில் உள்ள நிலுவைத் தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தவிர்த்து, அசல் ரூ.2459.57 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ.215.07 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2674.64 கோடியை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதில் முதற் கட்டமாக சென்ற நிதியாண்டில் ரூ 600 கோடி விடுவித்தும், மீதமூள்ள தொகையை 7 சதவிகிதம் வட்டியுடன் நான்கு ஆண்டுகளில் விடுவிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 23 கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 100 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையிலிருந்த 1,227 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்து 13,620 பயனாளிகளுக்கு அசல் தொகை ரூ.27.80 கோடியும், வட்டி ரூ.2.98 கோடியும், அபராத வட்டி ரூ.19 இலட்சமும் மற்றும் இதர செலவினம் ரூபாய் ஒரு இலட்சமும் என மொத்தம் ரூ.30.98 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்று ஆவடி மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெறும் இவ்விழாவில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, பஜார் கிளை, தமிழ்நாடு வீட்டு வசதி கிளை, பட்டாபிராம் கிளை மற்றும் திருநின்றவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நும்பல் நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த 44 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 546 பயனாளிகளுக்கு அசல் தொகை ரூ.1.33 கோடி, வட்டி ரூ.10.88 இலட்சம், அபராத வட்டி ரூ.82 ஆயிரம் என மொத்தம் ரூ.1.45 கோடி அளவிற்கு கடன் நிலுவைத் தொகைகள் தள்ளுபடி செய்து அதற்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 895 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,868 உறுப்பினர்களுக்கு ரூ.38.01 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று கூறினார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,துணை மேயர் எஸ்.சூரியகுமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மு.முருகன், ஆவடி மாநகராட்சி பணி குழு தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள் ராஜேந்திரன், அமுதா பேபி சேகர், அம்மு, ஜோதிலட்சுமி, துணைப் பதிவாளர்கள் கருணாகரன், காத்தவராயன், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.