பதிவு:2022-04-21 12:04:52
திருவள்ளூரில் தூய்மை மருத்துவமனை விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஏப் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தூய்மை மருத்துவமனையாக மாற்றும் நோக்கத்தில் ஏப்ரல் 1 முதல் 30 வரை பல்வேறு செயல்பாடுகள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திருவள்ளூர் தலைமை தபால் அலுவலகத்திலிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை வரை “தூய்மை மருத்துவமனை விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
பேரணியில் மருத்துவமனை கட்டிடங்களில் உட்புறம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துதல் அனைத்து கழிப்பறைகளையும் மேம்படுத்துதல் மற்றும் பழுது செய்தல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரம் நடுதல், தேவையற்ற செடி கொடிகளை அகற்றுதல், சுற்றுச்சுவரில் உள்ள சுவரொட்டிகளை அகற்றுதல், மஞ்சப்பை வழங்குதல், மருத்துவமனை சுவர்களில் சுண்ணாம்பு அடித்தல், மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்தங்களை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி, தூய்மை மருத்துவமனை விழிப்புணர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், புற்றுநோய் நுண்கதிர் சிறப்பு மருத்துவர் கோபிகா, என்.எச்.எம். ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ்,குழந்தை நல மருத்துவர் பிரபுசங்கர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.