பதிவு:2023-01-11 12:05:02
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திமுக நிர்வாகி போல் செயல்படுவதாகவும், அரசுப் பணத்தை கையாடல் செய்ததால் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி 14 பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் ஜன 11 : திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஏ.ஜி. இரவிச்சந்திரன் பதவி வகித்து வருகிறார். பேரூராட்சி செயல் அலுவலராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்துவதில் பேரூராட்சி செயல் அலுவலர் மெத்தனம் காட்டி வருவதாகவும் இதனால் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் பெருமளவில் முடங்கி இருப்பதாகவும் பேரூராட்சி மன்ற அனுமதி இன்றி பெரும் அளவில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணத்தை முறையாக பயன்படுத்தாமல் கொள்ளையடிப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர் பொது மக்கள் என யார் கோரிக்கை விடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் நிதி செலவினம் தொடர்பாக பேரூராட்சி மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக செயல்படும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் ஏ.ஜி ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த 13 வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு திருவள்ளூர் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சி திமுக நிர்வாகிகளுடன் இணைந்து செயல் அலுவலரும் திமுக நிர்வாகி போல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். செயல் அலுவலரை பணி நீக்கம் செய்யாத பட்சத்தில் மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்