பதிவு:2023-01-21 17:42:19
திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு முறையான அறிவிப்பில்லாததால் 2 விவசாயிகள் மட்டுமே பங்கேற்ற அவலம் : பல்வேறு துறைகளிலிருந்து 30 அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டதால் பரபரப்பு :
திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த் துறை, வேளாண்மை துறை, ஊராக வளர்ச்சித் துறை, தோட்டக் கலைத் துறை,கூட்டுறவு துறை, கால்நடை பராமரிப்புத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 30 அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவசாயிகள் இருவர் மட்டுமே கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேணுகோபால்ராஜ் அனைத்து விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் விவசாயிகளுக்காக கோட்ட அளவில் நடத்தப்படுகின்றது. இருப்பினும் கூட்டம் நடைபெறுவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால், மிக குறைந்த விவசாயிகள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.
எனவே அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் விவசாயிகள் கலந்துக் கொள்ளாததால், கூட்டம் நடைபெற்றும் யாருக்கு பயன் என்று கேள்வி எழுப்பினார். எனவே இனிவரும் நாட்களில் விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்து கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.