பதிவு:2023-01-21 18:21:58
புன்னப்பாக்கம் பகுதியில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்கள் : உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வி.இராஜாராமன் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், புன்னப்பாக்கம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருமான வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்களை வழங்கினர்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு–பி கிராமத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு 4000-ம் எண்ணிக்கையிலான அனன்யா மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் வழங்கப்பட்டு, அந்நாற்றுகள் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளையும், மேலும், ஒரு விவசாயிக்கு 2800 எண்ணிக்கையிலான சுப்ரீம் மஞ்சள் சென்டு மல்லி குழித்தட்டு நாற்;றுகள் வழங்கப்பட்டு, அந்நாற்றுகள் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், குன்னப்பாக்கம் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக நெல் தரிசில் பயிரு வகை பயிர்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்; 7 ஏக்கர் பரப்பளவில் 50 சதவிகிதம் மானியத்தில் பயிர் விதை பயிர் செய்யப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, புன்னப்பாக்கம் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க 50 சதவிகிதம் மானியத்திலான பல்வேறு வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில் சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி,வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.