திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

பதிவு:2023-01-29 22:47:29



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் ஜன 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, விவசாயிகளோடு கலந்துரையாடி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 09.02.2023 அன்று மேற்படி ஒருங்கிணைந்த முனைப்பு இயக்க முகாம் 141 கிராம பஞ்சாயத்துகளிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் கலந்து கொண்டு அரசு திட்டங்களில் பயன்பெற முன்பதிவு செய்ய வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நான்கு எண்கள் கரும்பு அறுவடை இயந்திரங்கள் இயக்கப்பட்டு இதுவரை 2306 மெ.டன்கள் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை அணுகி கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் தங்களுடைய கரும்பினை அறுவடை செய்து ஆலை அரவைக்கு தாமதம் இன்றி அனுப்ப வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 86 சதவீதம் தகுதியுள்ள பி.எம்.கிசான் பயனாளிகள் e-KYC பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே, இதுநாள் வரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC பதியாமல் நிலுவையிலுள்ள தகுதியுள்ள விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை விற்பனைத்துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு தவறாமல் e-KYC பதிவு செய்ய வேண்டும்.

மேலும் ஒருவார காலத்திற்குள் இப்பணியினை முடிப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசின் சார்பாக மேற்கண்ட துறைகள் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும், மானிய விலையிலான இடுபொருட்களையும், வேளாண் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒரு விவசாயிக்கு ரூ.2,33,000 மதிப்பீட்டிலான பவர் டில்லர் கருவி கொள்முதல் செய்வதற்காக ரூ.85,000 மானியத் தொகையும், வடகிழக்கு பருவமழையினால் 33 சதவிகிதத்திற்கு மேல் சேதமடைந்த 5 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.86,535-மும்,2 விவசாயிகளுக்கு வீடுகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் தளைகளுக்காக தலா ரூ.750 வீதம் ரூ.1500 மதிப்பீட்டிலான மானியத்தொகையும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு வழங்கிய 5 விவசாயிகளுக்கு ரூ.6,24,811 மதிப்பீட்டிலான கரும்பு கிரையத் தொகையும்,5 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கடனாக ரூ.3,61,700 மதிப்பீட்டிலான கடன் தொகை என மொத்தம் 18 விவசாயிகளுக்கு ரூ.11,59,546 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், வேளாண்துறை இணை இயக்குனர் எல்.சுரேஷ், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் டி.சண்முகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேஷன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கு.சமுத்திரம், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.