பதிவு:2023-02-05 12:25:27
கால்வாய் சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தம் : நீர்வளத்தறை அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர் பிப் 04 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் கடந்த பருவ மழை ,மாண்டஸ் புயல் மழை காரணமாக ஏரியின் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும் புழல் ஏரிக்கு நீர் திறந்துவிடப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால் அடுத்த பருவ மழைக்குள் அதனை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2654 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டதால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
இந்நிலையில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதையடுத்து நேற்று காலை முதல் புழல் ஏரிக்கு 240 கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட நீரானது நிறுத்தப்பட்டது. இருப்பினும் பேபி கால்வாய் மூலம் 38 கன அடி வீதம் சோழவரம் ஏரிக்கு நீர் சென்று கொண்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.