பதிவு:2023-02-08 18:32:58
திருவள்ளூர் அருகே குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற தம்பதியினரிடம் நட்பாக பழகி நூதன முறையில் 13 சவரன் நகை கொள்ளை வழக்கு : 6 மாத தேடுதலுக்குப் பிறகு ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது
திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள தர்காவில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி சண்முகம் அவரது மனைவி சசிகலா ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.
அப்போது சண்முகம் மற்றும் அவரது மனைவி சசிகலா ஏறிய அதே ஆட்டோவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னைத் தானே அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது இந்த தம்பதியினரிடம் நட்பாக பழகி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதனைத்தொடர்ந்து தர்காவில் இரவு நேரமானதால் அந்த 30 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி என்ற பெண் உள்ளிட்ட நான்கைந்து பேர் மயக்கமடைந்துள்ளனர்.அப்போது சண்முகம் மனைவி சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், மாலா மற்றும் தனிப்படை போலீசார் அந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் நூதன முறையில் நட்பாகப் பழகி 13 சவரன் நகையை பறித்துச்சென்ற அந்த மர்ம பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்த ஜமுனா (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்று குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த ஜமுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த துணிகர சம்பவம் நடந்து 6 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஆந்திராவில் பதுங்கி இருந்த பெண்ணை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.