போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை : பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு புகார்

பதிவு:2023-02-15 09:57:16

திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நயப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தண்டலம், பூந்தமல்லி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை நேரத்தில் 9.30 மணிக்கு தான் பேருந்துகள் வருகி்றது. மாணவ மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களை அனுமதிக்காததால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவ மாணவிகள், பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பள்ளிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என்றும், குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு காலதாமதமாக செல்வதால் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததால் பள்ளி மாணவ மாணவிகள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து 5 நபர்களை மட்டுமே மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்ததையடுத்து அவர்கள், காலை மாலை நேரத்தில் போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டதையடுத்து மாணவ மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.