பதிவு:2023-02-15 10:07:43
திருவள்ளூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக மாவட்ட சுகாதார பேரவை குழு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் பிப் 15 : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை ஊராட்சி வாரியாக கண்டறிந்து, மக்கள் பிரதிநிதிகள் மூலம் அக்கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆய்வு செய்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிதி ஆதாரங்களை கொண்டு அக்கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள கோரிக்கைகள் மாவட்ட சுகாதார பேரவையில் தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படுவதற்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கத்தில் மாவட்ட அளவில் கூடியுள்ள மாவட்ட சுகாதார பேரவை குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்து, பேசினார்.
தமிழகத்தில் தற்போது நடப்பாண்டில் 16 மாவட்டங்களில் சுகாதாரப் பேரவை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரப் பேரவை குழு கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பேரவையின் நோக்கமாவது மக்களின் சுகாதார தேவைகளை பஞ்சாயத்து வாரியாக கண்டறிந்து அதனை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர்-2022 முதல் 14 வட்டாரங்களிலும் மக்கள் பிரதிநிதிகளின் மூலமாக சுகாதார தேவைகளான கட்டிடங்கள், உபகரணங்கள், பணியாளர்கள் குறித்த கோரிக்கைகள் பெறப்பட்டது. இக்கோரிக்கைகளை மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆய்வு செய்து மாவட்ட அளவில் பெறப்படும் சமூக பங்களிப்பு நிதி ஆதாரம் மூலமாகவும், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிதி ஆதாரங்களை கொண்டு நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீதமுள்ள கோரிக்கைகளை இன்று மாவட்ட சுகாதாரப் பேரவை மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மேல்நடவடிக்கைகாக மாநில பேரவைக் குழுவிற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. சுகாதார நிலையங்களுக்கு செல்வதற்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, பணியாளர் பற்றாக்குறை, கட்டிட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் போன்ற கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உரிய கருத்துரு அனுப்பி நிவர்த்தி செய்யப்படும்.
மேலும், குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் இன்று நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க திட்டம் மற்றும் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 21.02.2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரு வயது முதல் 19 வயதுடைய அனைத்து குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கும், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர 20-30 வயதுடைய பெண்கள் அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் மாத்திரை அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை 200 அப-யும், 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் ஒரு மாத்திரை 400 அப-யும், கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு அல்பெண்டசோல் ஒரு மாத்திரை 400 அப-யும் என்ற விகிதத்தின்படி வழங்கப்படுகிறது.
இம்முகாமில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 20 முதல் 30 வயதுவரை உள்ள கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர 2,87,105 பெண்களுக்கும் மற்றும் 7,19,365 குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,428 பள்ளிகளிலும், 456 தனியார் பள்ளிகளிலும், 68 கல்லூரிகளிலும், 1,756 அங்கன்வாடி மையங்களிலும் என மொத்தம் 3,708 மையங்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தமாக 4,322 பணியாளர்கள் மூலமாக இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. எனவே, அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், பொது சுகாதார இணை இயக்குநர் சதீஷ் ராகவன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட ஆலோசகர் ஷோபா, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதார துணை இயக்குநர்கள் ஜவஹர்லால் (திருவள்ளூர்), செந்தில் (பூந்தமல்லி), லட்சுமிமுரளி(காசநோய்), டி.வசந்தி (தொழுநோய்), சேகர் (சுகாதாரப்பணிகள்), மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.