பதிவு:2023-02-15 10:11:22
திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் பிப் 15 : திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் கி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பதிவாளர் அலுவலக சார் பதிவாளர் சீ. மணிகண்டன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் வீ.ப.கிருஷ்ணகாந்த் வரவேற்றார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏ. மணிகண்டன், எஸ்.காந்திமதி நாதன், கோ. இளங்கோவன், கொ.மெல்கிராஜாசிங், கே. ஜெய்கர் பிரபு ஆகியோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி ப்ரமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கியும் காலிப் பணியிடங்களை நிரப்பியும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரசாணை 80-ன்படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும். பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாறுதல்களை நிரப்பிட வேண்டும். உரிய காலத்தில் முறையாக பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வினை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் பதிவு மாவட்ட சார் பதிவாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளிப்பட்டு சார் பதிவாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.