திருத்தணி அடுத்த தும்பிக்குளம் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல் : பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தும் அவரது கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு

பதிவு:2023-02-15 10:14:10



திருத்தணி அடுத்த தும்பிக்குளம் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல் : பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தும் அவரது கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு

திருத்தணி அடுத்த தும்பிக்குளம் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல் : பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தும் அவரது கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு

திருவள்ளூர் பிப் 15 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தும்பிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் கோபி. இந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க கோரி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இளைஞர் மேம்பாட்டு நிதி ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் அவரது கணவர் கோபி விளக்கம் அளித்துள்ளார். அதிகாரிகளிடம் புகார் கொடுத்த நீங்கள், அதிகாரிகளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் இரவு நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையையும் ஊராட்சிமன்ற தலைவருக்கு விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தும்பிக்குளம் ஊராட்சியின் தலைவராக உள்ள நிர்மலாவிற்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த அவரது கணவர் கோபியே தலைவர் போல் செயல்படுவதை கண்டித்து அந்த கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருத்தணி-நல்லாட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறி்து நேரம் பரபரப்பாக காணப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்கள் தலைவராக இருக்கும் போது அவருக்கு பதிலாக கணவரோ, உடன் பிறந்தவர்களோ யாரும் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்றும் அவ்வாறு தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தும்பிக்குளம் கிராமத்தில் திமுக பிரமுகரின் இந்த செயலால் நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.