பதிவு:2023-02-15 10:17:42
திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ம் தேதி 14 கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கிகள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் மூலம் “வங்கி மேளா” : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு
திருவள்ளூர் பிப் 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டுள்ள 80 கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் வசிக்கும் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வங்கித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் தெரிந்துகொண்டு பயன்பெற ஏதுவாக 15 நாட்களுக்கு ஒரு முறை அனைத்து வட்டாரங்களிலும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மூன்று மாதங்களுக்குள் 80 கிராமங்களிலும் “சிறப்பு வங்கி மேளா”நடத்த வேண்டும் என முதன்மை வங்கி மேலாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களில் வங்கித்துறையின் மூலம் 12.01.2023 மற்றும் 03.02.2023 ஆகிய தேதிகளில் 27 கிராமங்களில்“ வங்கி மேளா” நடத்தப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மூன்றாம் கட்டமாக 16.02.2023 அன்று தாமரைப்பாக்கம், எளாவூர், போளிவாக்கம், தடப்பெரும்பாக்கம், கீச்சலம், அன்னம்பேடு, திருப்பாச்சூர், ஜி.சி.எஸ். கண்டிகை, நல்லூர், விச்சூர், கார்த்திகேயபுரம், முத்துக்கொண்டாபுரம், செவ்வாய்பேட்டை மற்றும் பம்மதுகுளம் ஆகிய 14 கிராமங்களில் வங்கித்துறைகளுடன் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் இணைந்து “சிறப்பு வங்கி மேளா” மேற்படி கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
எனவே, கிராமங்களில் 16.02.2023 அன்று நடைபெறவுள்ள “சிறப்பு வங்கி மேளா” வில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு புதிய வங்கிக் கணக்கு துவங்கவும், இன்சூரன்ஸ் பதியவும் வங்கிக் கடன், கல்விக்கடன், பயிர்க்கடன், கிசான் கிரெடிட் கார்டு, சுயதொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக்கடன், வேளாண் இயந்திரங்கள் கடன், வேளாண் உட்கட்டமைப்பு நிதிக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் இதர வங்கிக் கடன்கள் பெறுவதற்கும் தேவையான விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த துறைகளின் சம்மந்தப்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களை “சிறப்பு வங்கி மேளா” நடைபெறும் மேற்படி 14 கிராமங்களுக்கு முன்கூட்டியே சென்று கிராம மக்களிடையே சிறப்பு வங்கி மேளா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.