கலைஞரால் துவக்கப்பட்ட மாவட்ட தலைநகர் திருவள்ளூரில் பூங்காக்கள் இல்லை :

பதிவு:2022-04-24 11:00:47



கலைஞரால் துவக்கப்பட்ட மாவட்ட தலைநகர் திருவள்ளூரில் பூங்காக்கள் இல்லை :

கலைஞரால் துவக்கப்பட்ட மாவட்ட தலைநகர் திருவள்ளூரில் பூங்காக்கள் இல்லை :

திருவள்ளூர் ஏப் 24 : ஒரு நகரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தூய காற்று வேண்டும்,மரங்கள்,பூங்காக்கள்,பசுமையான சூழ்நிலைகள் இருக்க வேண்டும்.ஆனால் மாவட்டத்தின் தலைநகர் திருவள்ளூரில் இருந்த பூங்காக்களையும் அரசை ஆக்கிரமித்துக் கொண்டது. பராமரிப்பில்லாமல் மற்ற பூங்காக்களும் செத்து பாலைவனம் ஆகிவிட்டன இதுபற்றிய விவரமாவது :

1996 ல் முதல்வர் கலைஞர் திருவள்ளூர் மாவட்டத்தை அறிவித்து மூன்றாண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை சிறு துரும்பு அளவு கூட வளர்ச்சியின்றி அதே ஆக்கிரமிப்பு, தேங்கிக் கிடக்கும் சாக்கடை, புழுதி படர்ந்த தெருக்கள் என்று இருந்து வருகின்றன.1949 ல் திருவள்ளூர் நகராட்சி துவங்கப்பட்டது. அப்போழுது சி.வி. நாயுடு என்ற வக்கீல் தன் மனைவி ராஜம்மாள் பெயரில் பூங்கா ஏற்படுத்த நிலத்தை நகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.நேதாஜி சாலையும் சந்திக்கும் இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் ராஜம்மாள் தேவி பூங்கா அமைக்கப்பட்டது.

வடக்கு ராஜவீதியில் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் கருணீகர் தெருவில், பூங்காவும் சிறுவர்கள் விளையாட்டுத் திடலும் இருந்தது. இந்த திட்டத்தின் அடிமனை மட்டும் தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமானது.இதன் அருகிலேயே திருவள்ளூர் நகராட்சியின் ஆரம்பப் பாடசாலையும் இருக்கிறது.இந்த இடத்தின் அடிமனைக்கு மாதந்தோறும் குறைந்த கட்டணம் செலுத்தப்பட்டது.

மேலும் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான திரு.வி.க. பஸ் நிலையம் சமீபத்தில் ராஜாஜி சாலையும், ஜவஹர்லால் நேரு சாலையும் சந்திக்கும் முக்கோணமான இடத்தில் நகராட்சி பூங்கா ஒன்று இருந்தது.இதன் பிறகு திருவள்ளூர் நகர எல்லைக்குள் புதிய வீட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வீட்டுமனை விற்பனையாளர்கள் தாங்கள் போட்ட லே அவுட்டில் சட்டப்படி பள்ளிக்கூடம்,விளையாட்டுத்திடல்,படிப்பகம்,கோவில்,பூங்கா ஆகியவைகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை ஒதுக்கி வரைப்படம் போட்டார்கள்.

ஆனால் அந்த இடங்களை நகராட்சியினர் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. மேலும் பொதுமக்களுக்கு புது வீடுகள் கட்ட நகராட்சியின் அனுமதியும் வழங்கினார்கள்.

நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது இடங்கள், நீண்டகாலம் அனாதையாய் இருந்ததால், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இந்த தகவல் பேப்பரில் வந்ததும் அப்பொழுது நகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் என்பவர் நடவடிக்கை என்ற பெயரில் சுமார் 10 இடங்கள் மீட்கப்பட்டு, மற்ற இடங்கள் மீளா மர்மமாகவே இருந்து வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, நகராட்சி பூங்காக்களை அதிகாரிகள் ஆக்கிரமித்தும், தில்லாலங்கடி வேலை செய்தும் பூங்காக்களை அழிக்கும் பணியை அருமையாய் நடத்தினார்கள். வக்கீல் சி.வி. நாயுடு தானமாக வழங்கிய பூங்கா இடத்தில், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டன. ரூ.10 லட்சம் செலவில் தாய்சேய் விடுதிகள் உட்பட பல கட்டிடங்கள் கட்டப்பட்டு, பூங்காவின் சுவடு தெரியாமல் அழித்து விட்டனர்.

பூங்கா இடத்தை மற்றவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்பது சட்டம்.மேலும் தன் மனைவி பெயர் சூட்ட வேண்டும் என்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வழங்கியவரையும் நகராட்சி மறந்து விட்டது. மேலும் இந்த பூங்கா முகப்பில் எம்.ஜி.ஆர்.சிலை நிறுவப்பட்டது. இது பூங்கா சட்ட விதிமுறைகளை மீறியது என்று நகராட்சி சார்பில் வழக்கு போடப்பட்டது. பின்னர் திமுக சேர்மன், அந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார்.

அடுத்து, வடக்கு ராஜவீதி, கருணீகர் தெருவில் இருந்த பூங்கா மற்றும் விளையாட்டு திடல் ஆகியவைகளுக்கு செலுத்தி வந்த வாடகைக் கட்டணத்தை முறையாக செலுத்த நகராட்சி மறந்து விட்டது.

அதனால் இடத்தின் உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கையும் அக்கரையுடன் நடத்தாமல் தீர்ப்பு வழங்கப்பட்டு, இந்த இடமும் கைவிட்டுப் போனது. இதற்கு அடுத்து, பஸ் நிலையம் சமீபம் இருந்த நகராட்சி பூங்கா,தனியார் ஒருவரால் ஆக்கிரமித்து வீடு,கடைகள் கட்டப்பட்டன.அந்த இடத்தை அவருக்கே அரசு விலைக்கு கொடுத்து விட்டது. இப்படி ஆளாளுக்கு பூங்காக்களின் கழுத்தை நெறித்து, பூங்காக்களும் மூச்சுத் திணறிப் போய் விட்டன.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களாவது திமுக வசம் உள்ள திருவள்ளூர் நகராட்சியில், பூங்காக்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.