பதிவு:2023-02-27 14:42:42
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒரு மணி நேரம் திருக்குறளை சொல்லியபடி 150 பேர் சிலம்பம் சுற்றி குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர் :
திருவள்ளூர் பிப் 27 : திருவள்ளூரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் தனி மனித ஒழுக்கத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழர்களின் பழம்பெரும் கலையான சிலம்பத்தினை திருக்குறளை சொல்லி 1 மணி நேரத்திற்கு சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகிகள் ராஜேஷ்குமார் மற்றும் உதய் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் திருக்குறளை சொல்லியவாறு ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர். மேலும் தலையில் கரகத்தை சுமந்தபடி 3 மணி நேரத்திற்கு சிலம்பம் சுற்றிய மாணவி ஜெயந்தியும் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்த சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி முதல் இந்தியா, இலங்கை, மலேசியா, இத்தாலி, சிங்கப்பூர், பெல்ஜியம், லண்டன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 9 நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தி வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.