பதிவு:2023-02-28 22:51:43
திருநாகராஜபுரம் கிராமத்தில் புதிய சுடுகாடு அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட திருநாகராஜபுரம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சடலத்தை புதைக்க தனி நபர் இடையூறாக இருப்பதால் புதிய சுடுகாடு அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் பள்ளிப்பட்டு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய சுடுகாடு அமைக்க அனுமதி அளித்துள்ளார். ஆனால் இதற்கும் தனிநபர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு நல்லடக்கம் செய்யவும், சடங்கு செய்யவும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளிப்பட்டு வட்டம், திருநாகராஜபுரம் கிராமத்தில் புதிய சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இ.தினேஷ்குமார் தலைமையில் சமூக முன்னேற்ற சங்க தலைவர் செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி கந்தப்பன் மற்றும் கிராம பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.