பதிவு:2023-02-28 22:55:27
திருத்தணி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் திமுக, அதிமுக உட்பட 10 உறுப்பினர்கள் புறக்கணிப்பு
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய குழுத் தலைவராக தங்கதனம் பதவி வகித்து வருகிறார்.சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்கதனம் அதிமுக ஆதரவுடன் ஒன்றிய குழுத் தலைவராக வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு திமுக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்தார். ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக துணைத் தலைவர் இ.என்.கண்டிகை ரவி கொண்டு வந்த தீர்மானம் இரண்டு முறை தோல்வியடைந்தது.
அதே நேரத்தில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தை மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் ஒன்றிய குழு துணைத் தலைவர் அதிமுகவைச் சேர்ந்த இ.என்.கண்டிகை ஏ.ரவி உட்பட திமுக, அதிமுகவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந் நிலையில், இன்று மூன்றாவது முறையாக நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் தங்கதனம், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிச்சந்திரன் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் மூன்றாவது முறையாக போதிய உறுப்பினர்கள் பலமின்றி கூட்டம் ஒத்திகைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்காததால் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கடந்த 2 ஆண்டுகளாக 15-வது நிதிக்குழு மூலம் ஒன்றியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக வர வேண்டிய ஒரு கோடி ரூபாய் முடங்கியுள்ளதாகவும், கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தணி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாததால் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் பதவி விலக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.