பதிவு:2023-02-28 23:02:30
ஜியோ சிம்கார்டை நகரின் முக்கிய சந்திப்புகளில் குடைகள் வைத்து விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜியோ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரம், மணவாள நகர், புட்லூர், காக்களூர், உள்ளிட்ட பகுதிகளில் ஜியோ சிம்கார்டு விற்பனை நிலையம் சார்பில் நேரடியாக முக்கிய சாலை சந்திப்புகளில் குடை வைத்து அங்கு பொது மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் புதிய சலுகைகளை அறிவித்து ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு பயனாளிகளை மாற்றுகின்றனர்.
இந்த நிலையில் மணவாள நகரில் உள்ள ஒரு மொபைல் ரீசார்ஜ் கடை வாசலில் நேரடி விற்பனை கடை வைத்து சிலர் விற்பனை செய்யும் போது அந்த கடையின் பெண் உரிமையாளர் இங்கு குடை வைத்து விற்பனை செய்யக்கூடாது என கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஆனது.
இதை தொடர்ந்து இன்று திருவள்ளூர் மணவாள நகர் புட்லூர் காக்களூர் ஆகிய பகுதிகளில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் சிம் கார்டு விற்பனை கடை நடத்தி வரும் சில்லரை விற்பனையாளர்கள் தங்களது கடைகளை மூடிவிட்டு திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள ஜியோ அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்தினர்.
பின்னர் அங்குள்ள அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இனி எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜியோ சிம் கார்டு விற்பனையை நாங்கள் நிறுத்தி விடுவோம் என்றும் மொபைல் ரீசார்ஜ் செய்வதையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் ஜியோ அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.