திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :

பதிவு:2022-04-25 14:57:41



திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :

திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :

திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக 57 இடங்களிலும் கூட்டுறவுத் துறையின் மூலமாக 2 இடங்களிலும் ஆக மொத்தம் 59 இடங்களில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து 24,683 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அம்பத்தூர், கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 9 வட்டாரங்களில் 42 இடங்களில் அரசு கட்டிடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக தேவைக்கேற்ப திறக்க மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று முதல் நவரை பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கும்; என்பதால் விவசாயிகள் e-Dpc இணைய தளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து தங்களின் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம். அரவை செய்த கரும்புகளுக்கு அரசு ஆணைப்படி கரும்பு கொள்முதல் தொகை டன் ஒன்றுக்கு ரூ.2000 வீதம் ரூ.22.77 கோடி நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 26.04.2022 அன்று வட்டார அளவில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மாவட்ட அளவில் வேளாண் அறிவியில் நிலையம் திருவூரிலும் “கிசான் மேளா” நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் கடன், விவசாயம் சார்ந்த தொழில் செய்தல், பால்பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றிற்கு ஏதுவாக விவசாய கடன் அட்டை பெற உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம். இது தவிர பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி பெற இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இணைய தளத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் கிசான் மேளாவில் கலந்து கொள்ளலாம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைவில் மேம்படுத்த வேண்டும்,கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து வட்டாரங்களிலும் சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை கட்டுபடுத்துவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஆய்வு செய்து கால்நடை பவுண்டு அமைத்து நிரந்த தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.முன்னதாக, இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி – மீன்வளத்துறை மூலம் 5 மீனவ விவசாயிகளுக்கு ரூ.8,00,000 தொகையில் விவசாய கடன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,வேளாண் துணை இயக்குநர் வி.எபினேசன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.