பதிவு:2023-03-08 20:28:23
திருவள்ளூரில் அக்னி வீர் என்ற புதிய திட்டம் மூலம் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பு : சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல்.எம்.கே.பாத்ரே பங்கேற்பு
திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்காக அக்னி வீர் என்ற புதிய திட்டம் மூலம் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல்.எம்.கே.பாத்ரே முன்னிலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு 2023-2024 ஆம் ஆண்டு முதல் ஆட்சேர்க்கும் புதிய முறை அக்னிவீர் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபாலினத்தவரும் www.joinindianarmy.nic.in எனும் இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு உதவ பல்வேறு ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் பயிற்சி சோதனை வீடியோக்கள் தளத்தில் கிடைக்கின்றன. வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். இணையதள முகவரியில் விண்ணப்பிக்க தேர்வுக்கட்டணமாக ரூ.250 யை எஸ்.பி.ஐ மற்றும் இதர வங்கிகளின் இணைய வங்கி மூலம் செலுத்தலாம்.
முதற்கட்டமாக பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டுமே இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் அளவீடு சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே மூன்றாம் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அக்னிவீர் பொதுப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப பணிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்தாம் வகுப்புடன் 2 வருடம் ஐடிஐ பயின்றவர்களுக்கு 20 மதிப்பெண்களும், பத்தாம் வகுப்புடன் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் டிப்ளமோ பயின்றவர்களுக்கு 30 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்புடன் ஒரு வருடம் ஐடிஐ பயின்றவர்களுக்கு 30 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்புடன் இரண்டு வருடங்கள் ஐடிஐ பயின்றவர்களுக்கு 40 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்புடன் டிப்ளமோ பயின்றவர்களுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கி முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்த அனுமதி அட்டையினை அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும், என்.சி.சி மற்றும் தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பங்கேற்று பதக்கம் பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில், நேர்மையான முறையில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். நமது மாவட்டத்தில் கற்போர் வட்டம் அமைப்பு மூலமாக மத்திய மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகவும் இளைய தலைமுறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக அக்னி வீர் என்ற புதிய திட்டம் மூலம் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சென்னை, சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல்.எம்.கே.பாத்ரே விழிப்புணர்வு விளக்கப் படங்கள் மூலம் எளிதில் ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பிப்பது குறித்து செய்முறை விளக்கமளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம் குமார், அலுவலக மேலாளர் (நீதியியல்) டி.மீனா, ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.