பதிவு:2023-03-08 20:48:23
திருத்தணி அருகே பிரசவ வலிகாரணமாக 108 அவசர ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்
திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர். நிறைமாத கர்ப்பிணியான ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
வாகனத்தை ஓட்டுனர் விஜயகுமார் ஓட்டி வர செவிலியர் தாட்சாயினி கர்ப்பிணி ஜெனிபரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளார். ஆனால் பிரசவ வலியால் துடித்ததால் ஜெனிபருக்கு ஆம்புலன்ஸிலேயே செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஜெனிபருக்கு 2 கிலோ 400 கிராம் எடையுடன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தாய் மற்றும் சேய்யை கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். இதில் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பாலமுருகன் ஜெனிபர் தம்பதியினருக்கு இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.