பதிவு:2023-03-13 20:14:18
திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் 70 வயது முதியவர் ஒன்றரை மாதங்களாக ஆதரவின்றி படுத்து கிடக்கும் அவலம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருவள்ளூர் மார்ச் 13 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் 24 மணி நேரமும் அதே இடத்தில் படுத்துக்கொண்டும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் யாரேனும் வாங்கித் தரும் உணவை வாங்கி சாப்பிட்டும் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற எந்த விவரமும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது வயது மூப்பு காரணமாக அப்படி இருக்கிறாரா? என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக வருபவர்கள் அல்லது நோயாளிகளை பார்க்க வருபவர்கள் யாரேனும் பரிதாபப்பட்டு வாங்கித் தரும் உணவை சாப்பிட்டு அங்கேயே சுருண்டு விழுந்து கிடக்கும் முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.