பதிவு:2023-03-15 09:58:24
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
திருவள்ளூர் மார்ச் 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக பூச்சி மருந்து கடைகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் அபாயகரமான 6 எண் பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தடைசெய்து அரசாணை வழங்கப்பட்ட நிலையில் மார்ச் 1 ம் தேதி முதல் குளோரிபைரிபாஸ், மோனோகுரோடாபாஸ், புரபோனாபாஸ்,அசிபேட்,. புரபோனாபாஸ் + சைப்பர்மெத்ரின், குளோரிபைரிபாஸ் + சைப்பர்மெத்ரின் ஆகிய அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளை தற்காலிகமாக தடை செய்திட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது, மேலும். மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது,
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனை நிலையங்களிலும் வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்கள் மூலம் திடீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
அரசாணையை மீறி அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்கள் மூலம் பூச்சிமருந்து சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயர் மட்ட குழுவின் பரிந்துரைப்படி மேற்குறிப்பட்ட 6 எண் அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தற்காலிகமாக தடைசெய்து பூச்சிக் கொல்லி சட்டம் 1968 வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இம்மாதிரியான பூச்சிக் கொல்லிகளை 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ விற்கவோ கூடாது. அனைத்து பூச்சி மருந்து நிறுவனங்களும்,விவசாயிகளும் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் இது குறித்த புகார்களை தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்- பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.