பதிவு:2023-03-17 19:55:39
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்எச் பிரிவில் லைசென்ஸ் பெற்றுத்தர ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு :
திருவள்ளூர் மார்ச் 17 : சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள நரசிம்மா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ரவிகுமார் என்பவர் எச் ஆர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சல்ப்பர் எடுத்து செல்வதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் எம்.எச். பிரிவில் லைசென்ஸ் பெறுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு மனு செய்திருந்தார்.
அந்த எம்எச் பிரிவில் கடந்த 2010-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக விபிஷ்ணன் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த மனு சம்மந்தமாக கம்பெனியின் மேலாளர் ரவிகுமார் என்பவர் விபிஷ்ணனை சந்தித்து மனு பரிந்துரை செய்து லைசென்ஸ் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த விபிஷ்ணன் மனுவை பரிந்துரை செய்து லைசென்ஸ் பெற்றுத்தர ரூ.2,500 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் லைசன்ஸ் பெற அலுவலக உதவியாளர் விபிஷ்ணனுக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து சென்னை மாநகர ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராமச்சந்திர மூர்த்தியிடம் விபுஷ்ணன் மீது கடந்த 16.12.2010 அன்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் விபிஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரவிக்குமாரிடமிருந்து லஞ்சப்பணம் இரண்டாயிரத்து 500 ரூபாயை அவரது அலுவலகத்தில் விபுஷ்ணன் கேட்டுப் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டார். பின்னர் விபிஷ்ணன் மீது வஞ்சம் பெற்ற குற்றத்திற்காக திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அப்போது எம்எச் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் விபிஷ்ணன் என்பவர் ரவிக்குமாரிடம் லைசென்ஸ் பெற பரிந்துரை செய்வதற்கு லஞ்சப்பணம் இரண்டாயிரத்து 500 ரூபாயை கேட்டுப் பெற்ற குற்றம் நிரூபணமானது. இதனையடுத்து திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரசு விபிஷ்ணனுக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன்படி 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்புக்குப் பின் விபிஷ்ணனை புழல் சிறையில் அடைத்தனர்.