ஞாயிறு கிராமத்தில் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளம் சீரமைப்பு : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :

பதிவு:2023-03-17 19:58:02



ஞாயிறு கிராமத்தில் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளம் சீரமைப்பு : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :

ஞாயிறு கிராமத்தில் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளம் சீரமைப்பு : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 17 : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், அருமந்தை அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தொடர்பாகவும், ஞாயிறு கிராமத்தில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு புதிய திருக்கோயில் கட்டுதல் தொடர்பாகவும் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசினார்.

1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோயில்களில் வருமானம் இல்லாத நிலையில் பராமரிப்பின்றி இருந்ததை அறிந்த முதலமைச்சர் அத்திருக்கோயில்களை புனரமைக்க ரூபாய் 100 கோடியை கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் நிதி வழங்கியுள்ளர்.அதில் தற்போது 104 திருக்கோயில்களை ரூ.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணி மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என இத்திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

அந்த வகையில் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் திருக்குளத்தினை மேம்பாடு செய்திடவும் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தினை சுற்றுசுவர் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இதற்கு கூடுதல் நிதி தேவையெனில் துறையின் ஆணையரின் பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும். இக்கிராமத்தில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 4 கிரவுண்ட் அளவிலான இடத்தில் ஏற்கனவே அந்த பகுதி மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு சிவலிங்கம் பூமிக்குள் புதைந்த நிலையில் இருந்தது. அந்த இடத்தினை கள ஆய்வு செய்தபோது அந்த சிவலிங்கம் எடுக்கப்பட்டு தற்போது வெட்டவெளியில் அமைக்கப்பட்டு தினந்தோறும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஒரு திருக்கோயில் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இன்று களஆய்வு செய்து மக்களின் கருத்தை கேட்டறிந்தோம். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, புதிய திருக்கோயிலை உருவாக்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம். அதேபோல், அனுமந்தை, அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட மண்டல குழுவிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 90 ஏக்கர் நிலத்தினை திருக்கோயிலின் மேம்பாட்டிற்காக, அன்றாட வழிபாட்டிற்காக தேவையான பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் அந்நிலத்தினை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களிடம் முறையான வாடகை வசூல் செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இன்றைய கள ஆய்வில் இந்த இரண்டு திருக்கோயில்களை புனரமைக்கின்ற பணிகள், ஒரு திருக்கோயில் புதிதாக கட்டுகின்ற பணி அனைத்தையும் விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு பக்தர்களின் வழிபாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை உறுதுணையாக செயல்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 26 நபர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை. சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., ஆணையர் திரு.க.வீ.முரளீதரன்,இ.ஆ.ப., மண்டல இணை ஆணையர்கள் திரு.சி.லட்சுமணன், திருமதி.கி.ரேணுகா தேவி, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) திரு.இரா.ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.