திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை வாகனம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

பதிவு:2023-03-21 09:21:06



திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை வாகனம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில்

திருவள்ளூர் மார்ச் 20 : அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களுக்காக செயல்பட்டு வரும் "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் 2025-ம் ஆண்டிற்குள் 8 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெற வேண்டும் என்பதே இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 16 இலட்சம் மாணவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 53,223 மாணவர்களும் அடிப்படை கற்றலில் வளம் பெறுவார்கள். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புகளில் மாணவர்கள் கற்றல் நிலை அடிப்படையில் அரும்பு. மொட்டு, மலர் என்று பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெறுகிறது.

வகுப்பறைகளில் “என் மேடை என் பேச்சு” மாணவர்கள் பயமின்றி தன் கருத்தை வெளிப்படுத்தும் களமாக உள்ளது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பரப்புரை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது. இப்பரப்புரையானது திருவள்ளூரில் வடக்கு ராஜ வீதியில் ஆரம்பித்து பின் தாமரைப்பாக்கம் கூட்ரோடு மற்றும் ஆவடி பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டது. இப்பரப்புரையில் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்துகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி பகுதியில் "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தில் "எண்ணும் எழுத்தும்" திட்டம் மூலம் பயனடைந்த மாணவ மாணவியர்கள் "என் மேடை என் பேச்சு" என்ற தலைப்பில் உரையாடிய நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா, திரு.கந்தசாமி, வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.