பதிவு:2023-03-24 13:50:46
பள்ளிப்பட்டு பகுதியில் காற்றுடன் கூடிய கனமழையால் தென்னை மரம் சாய்ந்து முதியவர் பலியான சோகம்
திருவள்ளூர் மார்ச் 24 :திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. கோடை வெயில் தொடங்கிய நிலையில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகின்றது. இந் நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் பள்ளிப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒருமணி நேரம் கொட்டியது.
திருமால்ராஜ்பேட்டை கிராமத்தில் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் வழங்கிய அன்னதானத்திற்கு சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த குப்பைய்யா(70) என்ற முதியவர் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் கோயில் அருகில் நின்றிருந்த போது காற்றின் வேகத்திற்கு தென்னை மரம் சாய்ந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில் படுகாயமடைந்தஅவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குப்பைய்யா இறந்தார். கிருஷ்ணவேணி சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.