பதிவு:2022-04-25 18:19:41
வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடையே கலந்துரையாடினார் :
திருவள்ளூர் ஏப் 25: திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம் முன்னிலையில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடையே கலந்துரையாடி பேசினார்.
இது ஒரு பெரிய நகர பஞ்சாயத்து என்பதனால் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. மக்கள் தொகையோடு எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதை நான் அறிவேன். பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. உங்கள் அனைவருடைய கருத்துக்களை ஏற்று, அந்த கருத்துக்களை கேட்டு அதற்குரிய தகுந்த திட்ட நிகழ்ச்சிகள் என்ன என்று பாத்து, இருக்கின்ற திட்டங்களிலேயே எடுத்துச் செய்யலாமா, இல்லையென்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கட்டாயமாக அதற்கென புது திட்டங்களை வகுத்து இந்த கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேற்றுவோம் என்று உறுதியளிப்போம்.
இந்த ஊராட்சியில் மட்டும் ரூ.2,47,00,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடந்து வருகிறது. அப்படி இருந்தால் கூட இது மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய ஒரு ஊராட்சி. இன்னும் பல்வேறு பணிகள் நடைபெற வேண்டிய அவசியம் உள்ளது. இவையனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து தேசிய பஞ்சாயத்துராஜ் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் (பொறுப்பு) அகஸ்டியன் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அருண்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் தயாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.