பதிவு:2023-03-26 22:23:12
பொதட்டூர்பேட்டையில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற 2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக தொடர்பு ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது : கணக்கில் வராத 25 ஆயிரத்து 610 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல்
திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை அருகிலுள்ள கேசவராஜகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். ஆட்டோ ஓட்டுநரான இவர் புதிய வீடு கட்டி வருவதால் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு பொதட்டூர் பேட்டையில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மின்வாரிய வணிக தொடர்பு ஆய்வாளர் கணபதி அவரிடம் மின் இணைப்பு பெறுவதற்கு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்பு கொடுப்பதற்கு பிரகாஷிடம் மின்வாரிய அதிகாரி கணபதி 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ஆலோசனையின் பேரில் பொதட்டூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் 2000 லஞ்சம் கொடுத்த போது அதனை மின்வாரிய அதிகாரி கணபதி பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கணபதியை கைது செய்தனர்.மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை கணபதியிடம் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 610 பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மின்வாரிய வணிக தொடர்பு ஆய்வாளர் கணபதியை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.