பதிவு:2023-03-26 22:26:10
நகை வியாபாரிகளிடம் ஒன்றரை கிலோ தங்க நகை , ரூ 1 லட்சத்து 5 ஆயிரம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் ராமேஸ்வர்லால் ( 42 ) இவர் அப்பகுதியில் அடகு கடை வைத்தும் , சிறு கடைகளுக்கு சில்லரையாக தங்கம் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி ராமேஸ்வர்லாலிடம் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த பணியாளர்கள் கல்லூராம் ( 30) , சோகன்லால் ( 28 ) ஆகியோர் சுமார் 177 சவரன் தங்க நகைகளை பைக்கில் எடுத்து சென்றனர். இதில் பூந்தமல்லி , நசரத்பேட்டை , தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நகைகளை 2 சவரன் விற்பனை செய்தும் , கலெக்சன் ஆன பணம் மற்றும் பழைய பாக்கி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை வசூல் செய்து கொண்டும் , தாமரைப்பாக்கம் பகுதியில் இருந்து சோகன்லால் பைக்கை ஓட்டி செல்ல பின்னால் அமர்ந்து வந்த கல்லுராம் 175 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்றனர்.
அப்போது காரணி - மாகரல் இடையில் சென்ற போது பின்னால் 2 பைக்கில் வந்த முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் இவர்களை வழி மடக்கி கத்தியால் நகை பணம் வைத்திருந்த கல்லூராமை வெட்டினர் இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது பின்னர் அவரிடம் இருந்து 175 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்து கொண்டு ஓடி விட்டனர். பின்னர் கல்லூராம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண் வெங்கல் காவல் நிலையத்தில் இருந்த கல்லூராம் மற்றும் சோகன்லாலுவிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் 5 தனி படை அமைத்து தேடிவந்தனர்.
அதன்படி போலிசார் பூந்தமல்லி , நசரத்பேட்டை , செம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர் , தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள பெரிய கம்பெனிகள், மால்கள் போன்றவற்றில் இருந்த 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறி கொள்ளையர்கள் ஓட்டிச்சென்ற பைக்கின் வாகன எண் போன்றவற்றை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர்கள் திருநின்றவூர் அடுத்த பாலவேடு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட நகைக்கடை வியாபாரி ஒருவர் உள்பட கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார்,கிளிட்டாஸ் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 820 கிராம் தங்கம், கொள்ளையடிக்கு பயன்படுத்திய கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.