பதிவு:2023-03-30 09:36:41
திருவள்ளூரில் மாவட்ட அளவிலான செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே தொழிலாளர் நலன் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் நகராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே தொழிலாளர் நலன் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :
ஒவ்வொரு சூளைகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் விவரங்கள், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விவரங்கள், தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற விவரங்கள், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அனைத்து குழுந்தைகளையும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்வது முதலான தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை கொத்தடிமை தொழில் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காகவும், இந்த செங்கல் உற்பத்தியாளர்கள் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சரியான வேலையின் சூழ்நிலை உருவாக்குவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளின் பெயர்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்ச ஊதியம், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவசர உதவி எண்கள் அடங்கிய தகவல் பலகை வைத்தல் 100 சதவிகிதம் செங்கல் சூளைகளிலும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
வேறு மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் அந்த தொழிலாளர்களின் மொழியிலேயே தகவல் பலகை அமைக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 300 குழுந்தைகளுக்கு ஒரியா, பெங்காலி என அந்தந்த மொழிகளில் பாடங்களை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடையே தொழிலாளர் நலன் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தொழிலாளர் நலன் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் செங்கல் சூளைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டும் தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையிலுமான மாதிரி தகவல் பலகையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து, செங்கல் சூளைகளில் பணி புரியும் தொழிலாளர்களை முறைப்படுத்தும் பொருட்டு, உரிமையாளர்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான பணி நியமன கடிதங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைக்கும் விதமாக, தொழிலாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இதில் காவல்துறை இணை ஆணையர் (ஆவடி ஆணையரகம்) பி.விஜயகுமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,வருவாய் கோட்டாட்சியர்கள் ஜெ.ஹஸ்ரத் பேகம் (திருத்தணி), மை.ஜெயராஜ பௌலின் (திருவள்ளூர்), தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுதா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன்,செங்கல் சூளை சங்கத் தலைவர் ஆர்.ராமராவ், செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆர்.வெங்கடேசன், ஜெ.சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.