பதிவு:2023-03-30 09:43:01
திருவள்ளூர் அடுத்த சிறுவானூரில் பைக் மீது மண் லாரி மோதியதில் ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை ஜூனியர் ஒர்க்ஸ் மேலாளர் பலி :
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் அண்ணாதுரை. இவர் ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலை எனப்படும் எச்விஎப் தொழிற்சாலையில் ஜூனியர் ஒர்க்ஸ் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருத்தணி கோயிலுக்கு செல்வதற்காக டிஎன் 19 ஏஇசட் 3736 என்ற எண்கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் அருகே சிறுவானூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரே மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவருக்கு திருமணமாக சிவரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருப்பது தெரியவந்தது. மேலும் திருத்தணி கோயிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து சிவரஞ்சனி திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.