பதிவு:2023-04-01 23:15:22
பூவிருந்தவல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, பனிமலர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் ஊடகவியலாளர் மு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் கருத்துரையாற்றினார்.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினர்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதற்கு மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்களின் மரபும், நாகரிகமும், சமூகத்தில் பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்தும் முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ்; கனவுகள் என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்துகளை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மாபெரும் தமிழ் கனவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளியை மாவட்ட ஆட்சியர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் ஊடகவியலாளர் மு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்" என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ,"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மு.குணசேகரன் கருத்துரை வழங்கி, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடி மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
மேலும், மாணவ மாணவியரிடையே நடைபெற்ற தமிழ்ப் பெருமிதம் துணுக்குகள் வாசித்து விளக்கம் அளிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பெருமிதச் செல்வி மற்றும் பெருமிதச் செல்வன் என்ற பட்டம் சூட்டி பாராட்டுச் சான்றிதழையும், புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். தொடர்ந்து,மாணவ மாணவியரிடையே நடைபெற்ற கேள்வி பதில் பகுதியில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ மாணவியர்களுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேள்வியின் நாயகி மற்றும் கேள்வியின் நாயகன் என்ற பட்டம் சூட்டிப் பாராட்டுச் சான்றிதழையும் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.
இதில் பனிமலர் பொறியியல் கல்லூரி தலைவர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் சக்தி குமார், சரண்யா சக்தி குமார், பனிமலர் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.மணி, பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி, பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.