பதிவு:2023-04-04 11:54:52
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஏப் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 90 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 30 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 54 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 86 மனுக்களும் என மொத்தம் 308 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக திருவள்ளுர் வட்டத்தில் “ஜாமி ஆ மஸ்ஜீத்” பள்ளி வாசலில் அரபி ஆசிரியராக பணிபுரியும் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் வாங்கும் பொருட்டு மான்யத் தொகை ரூ.25,000-த்திற்கான காசோலையையும், மேலும், பாம்பு கடித்து உயிரிழந்தவரின் மனைவிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையையும்,. மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூ.25,000 த்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.5600 மதிப்பீட்டிலான தையல் இயந்திரத்தை ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.
பின்னர் இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து நேபாளம், காத்மண்டில் நடைபெறவுள்ள International Open Katmandu Champion Ship -ல் இந்திய அணியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.15,000-ம் வீதம் ரூ.30,000-த்திற்கான காசோலைகளையும்,ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து அம்மாற்றுத்திறனாளிக்கு ரூ.83,500 மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அ.கேத்ரின் சரண்யா,வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வி.எபினேசன் (வேளாண்மை), கா.காயத்திரி சுப்பிரமணி (பொது), துணை ஆட்சியர் (பயிற்சி) சு.சுபலட்சுமி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.