பதிவு:2023-04-08 16:25:44
திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீகருமாரியம்மன் கோவில் மீது வெங்காய லாரி மோதி விபத்து : லாரியின் ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் :
திருவள்ளூர் ஏப் 08 : கர்நாடக மாநிலம் சிந்தாமணி பகுதியில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரி ஒதிக்காடு கிராமம் அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் விஜயகுமார் திருப்பியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆலயத்தின் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்ததுடன் லாரியின் முன்பக்க வீல் உடைந்ததில் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் நடத்துனர் முரளி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
திருவள்ளூர் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது கூட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலை அகற்றுவதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அகற்றாமல் இருந்தனர். இதனையடுத்து கோவில் நெடுஞ்சாலை ஓரத்திலேயே இருந்து பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் லாரி மோதிய விபத்தில் தற்பொழுது கோவில் முழுவதுமாக சிதலமடைந்து இருப்பதால் பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர்.