பதிவு:2023-04-11 11:00:41
திருவள்ளூரில் 93 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பீட்டில் தலா 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 92 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 55 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 57 மனுக்களும் என மொத்தம் 267 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-IV தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டி நினைவு பரிசுகளையும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற குறும்பட கொண்டாட்ட நிகழ்வில் முதலிடம் பெற்ற பூந்தமல்லி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலருக்கு ரூ.12,000-க்கான காசோலையும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 6 தன்னார்வலருக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.12,000-க்கான காசோலையும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 93 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.87.50 இலட்சம் மதிப்பீட்டில் தலா 8 கிராம் தங்க நாணயங்களுடன் கூடிய நிதியுதவிகளையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கணவரை இழந்து வரிய நிலையில் வசிக்கும் ஒரு பயனாளிக்கு ரூ25,000மும், பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ20,000மும், கறவைப் பசுவை இழந்த ஒரு விவசாயிக்கு ரூ10,000 என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ55,000-க்கான காசோலைகளை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு வகை திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பயின்ற 5 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ50,000 வீதம் ரூ2,50,000மும் பட்டப் படிப்பு பயிலாத 7 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ25,000 வீதம் ரூ1,25,000மும் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் தொகை ரூ1,75,000 பெற்றதற்காக மானியத் தொகை ரூ56,000மும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ23,000மும் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ4.54 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன், கண்காணிப்பாளர் பார்த்திபன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் வி.பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.சித்ரா, கே.எஸ்.ஷோபா, இல்லம்தேடி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.