பதிவு:2023-04-12 00:08:52
மக்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்களை மக்களிடமே திரும்ப வழங்க வேண்டும்..
சனநாயகம் செழுமைப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த நூற்றாண்டில் தான் இந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்கள் மனைப்பட்டா கேட்டு மனு போட்டுக் கொண்டிருக்கும் அவலம் அரங்கேறி கொண்டிருக்கிறது.
இந்தியா ஜனநாயக நாடு, அரசமைப்புச் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது, பாலாறும் தேனாறும் பாய்கிறது, என்று ஆட்சியாளர்கள் பெருமை பீற்றிக் கொண்டிருக்கிற இந்த நாட்டில் தான் ஒழுகிற கூரை கொட்டகைகளுக்கு கூட வழியில்லாமல் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் குடி இருக்கிற மக்களை பார்க்கிறோம்.
இப்படி வாழ்கிற மக்களை அரசு மனிதர்களாகவே பார்ப்பதில்லை. மாறாக அவர்களை ஏதோ குற்றவாளிகளை போல நடத்துவதும், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அகற்றுவதும் தொடர்ந்து நடந்தேறி கொண்டிருக்கிறது. இந்த மண்ணின் மைந்தன் எப்படி ஆக்கிரமிப்பாளன் ஆனான்?
தன் மனைவி குழந்தைகளோடு நீர்நிலை புறம்போக்கில் தார்படுதாக்களையும் சாக்குகளையும் சுற்றிக்கொண்டு மின் இணைப்பு வசதி கூட இல்லாமல் இந்த காலத்திலும் வாழ்கிறார்கள் என்றால் அவனுக்கென்று ஒரு சென்ட் இடம் இருந்தால் அவன் ஏன் இப்படி அல்லல்பட போகிறார்?
நம் கையில் வைத்திருக்கிற செல்போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆனால் சில நிமிடங்களில் எதையோ இழந்ததைப் போல நாம் பதறுகிறோம். ஆனால் பால்குடிக்கும் பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் வாய்க்காங்கரையிலும் பேருந்து நிலையங்களும் கிடக்கும் எளிய மனிதர்களின் வலியை எந்த அரசாவது உணர்ந்து இருக்கிறதா?
அரசின் பார்வையில் இந்த எளிய மனிதர்கள், ஆக்கிரமிப்பாளர்கள். பொதுமக்கள் பார்வையில் இவர்கள் அசிங்கமான வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பெரும் பெரும் கட்டிடங்கள் கட்டி வைத்திருப்பவர்கள் நீர்நிலை குளங்களை தூர்த்து அதற்குப் பட்டா வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள் எல்லாம் ஆன்மீக கடவுளர்கள் இவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் எல்லாம் புனிதர்கள்.
இந்தியா முழுக்க அரசு நிர்வாகங்கள் இப்படித்தான் இயங்குகின்றன அதுபோலதான் நாங்கள் வசிக்கும் #திருப்பனந்தாள் பகுதியிலும் ஆன்மீகம் எனும் பெயரில் கடவுள் பெயரை சொல்லிகொண்டு ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்கிற மக்களுக்கு மாற்று இடம் தராமல் அவர்களை காலி செய்ய நினைக்கும் அதிகாரிகள் ஏழை எளிய மக்களுக்கு மனை பட்ட வழங்க வேண்டிய அரசு புறம்போக்கு நிலங்களை மடங்களுக்கும் கோயில்களுக்கும் பட்டா மாறுதல் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
கோவில்கள் மற்றும் சமய அறக்கட்டளைகளுக்கு அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து கொடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை தெரிந்தே அதிகாரிகள் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். ஏராளமான இடங்களை திருப்பனந்தாள் காசிமடம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
அதற்கான முழு தரவுகள் அந்தந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களை திரட்டி திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆதினங்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடம் மற்றும் கோயிலால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க வேண்டும். மனை பட்டா இல்லாத மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும்.
இல்லையேல்
தலை நிமிர சேரி திரளும்
அன்று தலை கீழாய் நாடு புரளும்
அமுதன் துரையரசன்
மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர்