பதிவு:2023-04-14 18:15:09
பேரம்பாக்கத்தில் பள்ளி வளாகத்தில் கட்டப்படும் ரேஷன் கடையை மாற்று இடத்தில் கட்டக் கோரி கிராம மக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்,
இந்த பள்ளியில் மாணவர்களுக்கு முறையான விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகத்திலேயே கழிப்பிட வசதி ஏதும் இல்லாமல் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மற்றொரு புறத்தில் நியாய விலை கடை அமைக்க ஒப்பந்ததாரர்கள் பள்ளம் தோண்டி கடை கட்டும் பணியை மேற்கொண்டு வந்தனர். இதனையறிந்த பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் தொடர்ந்து பணி நடைபெற்றால் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்கள் நலன் கருதி நியாய விலை கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர், தங்கள் கிராமத்திற்கு நியாய விலை கடை வருவதை வரவேற்பதாகவும் அதை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமலேயே இந்த கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுவதால் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர், தாசில்தார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரியிடம் மனுவும் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.