பதிவு:2023-04-15 16:17:24
திருவள்ளூர் அருகே நடைபெற்ற சாலை விபத்துக்கு காரணமான அரசு அதிகாரிகளை முதல் குற்றவாளியாக பதிவு செய்ய வேண்டும் : மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புகார்
திருவள்ளூர் ஏப் 15 : திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்கிற என்சன் என்பவரது மனைவி சாமுண்டீஸ்வரி(40) இவர் கடந்த 8-ந் தேதி காலை தனது டிஎன் 20 சிஜி 6188 என்ற இரு சக்கர வாகனத்தில் கொசவன்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருப்பாச்சூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மண் ஏற்றிக் கொண்டு வந்த டிஎன் 73 என் 5181 என்ற லாரி சாமுண்டீஸ்வரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எஸ்.யுவராஜ் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பழைய தார் சாலையை பெயர்த்தெடுத்து விட்டு புதிய தார் சாலையை அமைக்கும் பணி நடந்தேறி வருகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சாலை பணி (என்எச்.205 ) நடந்துகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
எனவே இந்த சாலை விபத்துக்கும் நடந்தேறிய உயிர் சேதத்திற்கும் முழு பொறுப்பை இந்த சாலை அமைக்க ஒப்பந்தம் போட்ட இகேகே இன்ப்ராஸ்ட்ரக்சர் உரிமையாளர் தியாகராஜன், நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சென்னகேசவன், அன்றைய தினம் பணியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் தான் காரணம் என அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒரு நெடுஞ்சாலை பணி புதுப்பிக்கக் கூடிய நிலையில் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தாமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அத்தனை பேரையும் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்திய ஒன்றியத்தில் சாலை விபத்துக்கள் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் நடப்பதாக புள்ளி விவரங்களும் நாளேடுகளும் சொல்லுகின்றன.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அளவில் அவப்பெயர் உருவாகிறது. மெத்தனப் போக்கில் தங்களின் கடமையை செய்யத் தவறிய அத்தனை அதிகாரிகளையும் கைது செய்து வரலாற்று சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதுடன் இறந்தவர் குடும்பத்திற்கு இவர்களின் வைப்பு நிதியில் இருந்தும் சம்பளத்தில் இருந்தும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இனிமேல் தமிழ்நாட்டில் எந்த சாலை புதுப்பிக்கும் பணியின் போதும் ஒப்பந்ததாரரின் கவனக்குறைவால் விபத்துக்களோ உயிர் சேதங்களோ நடந்தால் ஒப்பந்ததாரர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் எஸ்.யுவராஜ் தெரிவித்துள்ளார்.