பதிவு:2023-04-22 16:24:47
திருவள்ளூரில் நிரந்தரமாக சார் பதிவாளரை நியமிக்க பொது மக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஏப் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள 89 கிராமம் மற்றும் நகரங்களில் வாழும் மக்கள் தனது சொத்துக்களை பதிவு செய்தல் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவுகளை திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர் .
அரசு விதிமுறைகளின் படி நாள் ஒன்றுக்கு சுமார் 200 டோக்கன்கள் வரையிலும் பதிவு செய்ய அனுமதி உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக இருந்த சுமதி என்பவர் குற்றச்சாட்டு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உமா சங்கரி என்பவர் சார்பதிவாளராக பொறுப்பேற்றார்.
அவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த பிரகாஷ் கடந்த 20 நாட்களாக விடுமுறை காரணமாக அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பத்திரப் பதிவு செய்ய பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காலை முதல் இரவு வரை காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் ஆன்லைனில் வில்லங்கம் பார்ப்பவர்களுக்கு ஒரே நாளில் கிடைக்க வேண்டிய வில்லங்க சான்று சார்பதிவாளர் இல்லாததால் ஒரு வாரத்திற்குப் பிறகு தான் கிடைக்கிறது.
அதே போல் நேரிடையாக வில்லங்கம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்வர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு தான் சான்றிதழ் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சொத்துக்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே பொது மக்கள் தாங்கள் வாங்கும், விற்கும் சொத்துக்களை விரைந்து பத்திரப் பதிவு செய்ய ஏதுவாக உடனடியாக திருவள்ளூரில் சார் பதிவாளரை நியமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.