திருவள்ளூர் அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வெல்டர் பலி

பதிவு:2023-04-24 14:56:59



திருவள்ளூர் அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வெல்டர் பலி

திருவள்ளூர் அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வெல்டர் பலி

திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வலசை வெட்டிக்காடு, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எட்டியப்பன் மகன் தனசேகரன் (37). வெல்டிங் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு (22-ந் தேதி) 9.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு தனசேகரன் சென்றுள்ளார். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் வீட்டிற்கு வராததால் தனசேகரனின் மனைவி நித்யா மற்றும் அவரது தங்கை அமலா ஆகிய இருவரும் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு தாமோதரன் என்பவரின் தோட்டத்தில் வேலி அருகில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது நித்யாவின் தங்கை அமலா அந்த வேலியை எதேச்சையாக தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து மணவாளநகர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து பார்த்த போது விவசாயி தாமோதரனுக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தில் வேர்க்கடலை மற்றும் மிளகாய் பயிரிட்டுள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்திவிடுவதால் மின் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதை அறியாத தனசேகரன் உடல் உபாதையை கழிப்பதற்காக சென்ற போது அந்த மின் வேலியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனசேகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயம் அடைந்த அமலாவையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தனசேகரனின் மனைவி நித்யா மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.