பதிவு:2023-04-27 08:39:18
திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் சார்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நடமாடும் வழிகாட்டுதல் மையம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். சார்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இணையத்தில் பதிவு செய்யும் வகையிலும் தயாரிக்கப்பட்ட நடமாடும் வழிகாட்டுதல் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு பேசினார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ உதவி, தாய் சேய் பராமரிப்பு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெறலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதற்கு அருகாமையிலுள்ள அங்கன்வாடியையும், தடையின்றி பள்ளி கல்வியை பெறுவதற்கு அருகாமையிலுள்ள பள்ளியையும் அணுகலாம். அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் ரேஷன் அட்டை Digilocker மூலம் எண்ணை குறிப்பிட்டு குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் இணைத்தல், இ.ஷரம் மற்றும் ஐ.எஸ்.எம் போர்ட்டலில் பதிவு செய்தல் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு குறிப்பிட்டுள்ள உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுட் காப்பீடு திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம். டிஜிட்டல் லாக்கா சான்றிதழ்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.
இ.ஷரம்-ல் பதிவு செய்வதினால் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறலாம். தொழிலாளர் உரிமையை நல்ல முறையில் பாதுகாத்து கொள்ளலாம், 60 வயது பூர்த்தியடைந்த பிறகு மாதம் ரூ.3000 பென்சன் பெறலாம். இறப்பு நேரிட்டால் ரூ.2 இலட்சம் நிதியுதவியும், ஏதேனும் ஊனம் ஏற்பட்டால் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவியும் என இ.ஷரம்-ல் பதிவு செய்வதினால் பல்வேறு நன்மைகள் பெறலாம்.
வெளிமாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இணையத்தில் பதிவு செய்வதினால் அரசாங்கம் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும், பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் சொந்த ஊருக்கு திரும்ப உதவியாக இருக்கும், தமிழ்நாடு கட்டுமான நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதினால் கல்வி உதவித்தொகை 6-ம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை பெறலாம். திருமண உதவித் தொகை ரூ.20,000 பெறலாம், 60 வயது பூர்த்தியடைந்த ரூ.1000 பென்சன் பெறலாம். வீடு கட்ட ரூ.5 இலட்சம் பெறலாம், இயற்கை மரணம் நேரிட்டால் ரூ.50,000 பெறலாம், விபத்து மரண நேரிட்டால் ரூபாய் ஒரு இலட்சம் என இதுபோன்ற நன்மைகள் பெறலாம்.
உதவிக்கு தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி எண் : 1800 4252 650, திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாடு அறை, தொழிலாளர் துறை : 044 - 27667117, சைல்டு லைன் (குழந்தைகளுக்கான உதவி எண்) : 1098, பெண்களுக்கான உதவி எண் : 1091 மற்றும் 181 ஆகிய எண்களை உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். எனவே, நமது மாநில மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை நலனை பாதுகாக்கவும், கொத்தடிமை இல்லாத திருவள்ளூர் மாவட்டமாகவும் உருவாக்க உறுதி செய்வோம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுதா, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.