பதிவு:2023-04-27 08:44:31
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வாயிலில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் :
திருவள்ளூர் ஏப் 26 : அங்கன்வாடிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு அந்தச் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் லட்சுமி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அப்போது அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கேஸ் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளவாறு காலதாமதமின்றி வழங்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஏற்கெனவே காலை சிற்றுண்டி கொடுக்கும் நிலையில், தனியாருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
செல்போன் வழங்கி 4 ஆண்டுகள் ஆன நிலையில் பழுதடைந்துள்ளதால் உடனே புதிய செல்போன் வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளூர் பணியிட மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். மினி மையப் பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.