பதிவு:2023-04-27 08:51:00
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலைய மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு : சென்னை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும்.தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது 22 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என் எஸ் ஜி 2 (நான் சபர்பன் கிரேட்2) என்று ரயில்வே நிர்வாகத்தால் தரம் பிரித்து தெரிவித்துள்ளது சென்னை சென்ட்ரல், எழும்பூர், மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது.
ரயில்வே கோட்ட ரயில் தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என் எஸ் ஜி 3 என்ற நிலையில் இருக்கும்போது திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என் எஸ் ஜி 2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.அகில இந்திய அளவில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. இதன்படி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டும் பெருந்திட்டம் தயார் செய்து மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரி அறை, சிக்னல் ( பேனல்) அறையை பார்வையிட்டு விரிவாக்கம் செய்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையத்தை நடந்து சென்று பார்வையிட்டார். மேலும் ஒவ்வொரு நடைமேடையையும் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மணவாளநகரிலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலையை பார்வையிட்டார்.
அப்போது, அந்தச்சாலையை விரிவாக்கம் செய்யவும், அதற்கு போதுமான இடம் உள்ளதா என்பதை பார்வையிட்டு பணியாளர்களை அளவீடு செய்தார். பின்னர் நகரும் படிக்கட்டுகளை பயணிகள் பயன்படுத்துகிறார்களா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ரயில் நிலையத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பயணிச்சீட்டு வழங்கும் மையத்தில் சீட்டுக்கள் வாங்கும் போது சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வின் போது,ரயில் நிலைய அதிகாரி சதீஷ்குமார், சென்னை கோட்ட பயணிகள் ஆலோசனைக் கூழு உறுப்பினர் ஒய்.ஜெயபால்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.