பதிவு:2023-04-27 08:54:35
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் :
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவப் பெருமால் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன் படி இன்று காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 9.30 மணிக்கு பக்தி உலாவும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (27-ந் தேதி) காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும் 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக 2-ந் தேதி காலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ந் தேதி 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதே போல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி திருக்கோயில்.இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் நேற்று முன்தினம் இரவு மிருத்சங்கி அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, விநாயகர் உற்சவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சித்திரை பிரம்மோற்சவம் நேற்று (25-ந் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் மே 1-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 2-ந் தேதி 4 மணிக்கு பிச்சாடனார் உற்சவமும், 8 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 4-ந் தேதி காலை 6 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்துப்படி வள்ளுவன் காட்சியும், மதியம் 12 மணிக்கு நடராஜர் அனுக்கிரக உற்சவமும் மாலை 4 மணிக்கு சந்திரசேகரர் தீர்த்தவாரியும் நடைபெறும். இரவு 7 மணிக்கு சோமாஸ்கந்தர் பவழக்கால் சப்பரமும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும்.
மே 5-ந் தேதி இரவு பந்தம்பறி திருவூடல் உற்சவமும், 6-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும். 7-ந் தேதி பைரவர் வடமாலை விழாவுடன் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.